தியாகத்தின் பெருமையைப் போற்றும் திருநாளான பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் திரு டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சாதி மத வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையோடும், மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் வாழ்ந்திட, பக்ரீத் தினத்தில் வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பக்ரீத் தினத்தை ஒட்டி டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தியாகத்தின் பெருமையை போற்றும் திருநாளான பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். இறை நம்பிக்கையுடையவர்கள் எத்தகைய தியாகத்தையும் செய்திடுவார்கள். அவர்களின் தியாகம் இந்த உலகம் உள்ளவரை கொண்டாடப்படும் என்பதற்கு சாட்சியாக திகழ்வது பக்ரீத் பண்டிகை என குறிப்பிட்டுள்ள டிடிவி தினகரன். இறை தூதர் இப்ராஹீமை போல, இறைவனின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையோடும், ஆத்மார்த்தமான அன்போடு தியாகங்களை செய்வோர், எல்லா காலத்திலும் போற்றப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளர்.
தனக்கென வாழாத தியாகத்தின் சிறப்பும், வலிமையும் மற்ற எல்லாவற்றையும் விடப் பெரியது எனவும், அதனை மனதில் கொண்டு இந்த நன்னாளில் “பசித்தவர்களுக்கு உணவும்” “துன்பப்படுபவர்களுக்கு உதவியும் எளியவர்களிடம் கருணையும் காட்ட வேண்டும் என்று நபிகள் பெருமகனாரின் மொழியின் படி ஒவ்வொருவரும் நடந்துகொள்வோம், எனவும் திரு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். எந்த சூழலிலும் மனிதநேயம் மாறாமல் நடந்துகொள்வோம் எனவும், மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கும், சக மனிதர்களின் நல்வாழ்வுக்கும், அவரவர் அளவில் தியாகத்தையும், தர்மத்தையும் செய்து சாதி மத வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையோடும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் வாழ்ந்திட பக்ரீத் தினத்தில் வாழ்த்துவதாகவும் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.