Categories
மாநில செய்திகள்

முகக் கவசங்கள் என்ற பெயரில்… புதிய 5ஜி செல்போன்கள் பறிமுதல்…!!

முகக் கவசங்கள் என்ற பெயரில் வந்த பார்சலில் ரூ. 70 லட்சம் மதிப்புள்ள 5ஜி செல்போன்கள் இருந்ததை கண்டறிந்து அவற்றை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்துக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் மருத்துவ உபகரணங்கள் கொண்டு வருவதற்காக சரக்கு விமானங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருக்கிறது. இந்நிலையில் மருத்துவ உபகரணங்கள் என்ற பெயரில் வெளிநாடுகளில் இருந்து போதை மாத்திரைகள் கடத்தப்பட்டு வந்ததை சுங்க இலாகா அலுவலர்கள் கண்டுபிடித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, ஹாங்காங்கில் இருந்து வந்த சரக்கு விமானத்தில் இருந்த பார்சல்களை சுங்கதுறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.

முகக் கவசங்கள் என்று பெயர் பதித்துள்ள பார்சல்களை சந்தேகத்தின் பேரில் பிரித்து பார்த்தபோது, அதில் இந்தியாவில் இதுவரை அறிமுகப்படுத்தாத 5ஜி செல்போன்கள் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிரபல நிறுவனமான சாம்சங் கேலக்ஸியின் 5ஜி செல்போன்கள் இருந்தன. உடனே அவற்றை சுங்கத்துறை அலுவலர்கள் பறிமுதல் செய்து, இவற்றை கடத்தி வந்தவர்கள் யார்? இந்தியாவில் இதுவரை வராத 5ஜி புதிய செல்போன்கள் ஏன் கொண்டு வந்தார்கள் என சுங்க இலாகா அலுவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.

Categories

Tech |