ஆன்லைன் சூதாட்டத்திற்கு தூண்டுதலாக இருந்த நிர்வாகத்தின் மீதும் அந்த விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா உள்ளிட்டோர் மீதும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரியும் அது தொடர்பான விளம்பரங்களில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்யவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டுள்ளது. இதுபற்றி சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் சூரிய பிரகாசம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கின்ற மனுவில், “ஆன்லைன் சூதாட்டங்கள் சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆரம்ப காலத்தில் பொழுதுபோக்காக அதற்குள் செல்கின்ற இளைஞர்கள், பின்னர் அதற்கு அடிமையாகி விடும் சூழ்நிலை ஏற்பட்டுவிடுகிறது. கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா போன்ற பிரபலங்கள் மூலமாக எடுக்கப்படும் விளம்பரங்கள், இளைஞர்களை முழுவதுமாக மாற்றி விடுகிறது. ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவதற்காக வட்டிக்கு பணம் வாங்குகின்றனர். அதன் பின்னர் அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாத சூழ்நிலையில் இளைஞர்கள் பலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்.
ப்ளூவேல் என்ற விளையாட்டால் மாணவர்கள் பெரும்பாலானோர் தற்கொலைக்கு தூண்டப்பட்ட காரணத்தால் உயர்நீதிமன்றம் அதனை தடை செய்தது. ப்ளூவேல் விளையாட்டை விட ஆன்லைன் சூதாட்டங்கள் மிக ஆபத்தானது என்பதால் நீதிமன்றம் இதில் உடனடியாக தலையிட்டு அந்த விளையாட்டிற்கு தடை விதிக்கவும் ஆன்லைன் சூதாட்ட இணையதளங்களை உடனடியாக முடக்கவும் உத்தரவிட வேண்டும். இதுபோன்ற இணையதளங்களை நிர்வாகம் செய்து வருபவர்களையும், அந்நிறுவனங்களுக்கு உதவும் வகையில் விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி மற்றும் நடிகை தமன்னா ஆகியோரையும் கைது செய்ய வேண்டும்” என கோரிக்கையின் பேரில் இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா முன்னிலையில் வழக்கறிஞர் சூரியபிரகாஷ் முறையீடு செய்துள்ளார். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கானது வருகின்ற ஆகஸ்ட் நாலாம் தேதி விசாரணைக்கு வரும் என நீதிபதிகள் கூறியுள்ளனர்.