99 வயதான மூதாட்டி விமான பயிற்சியாளராகவும் மாணவர்களுக்கு விமானம் சம்பந்தமான பாடங்கள் நடத்தியும் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ரிவர்சைட் என்ற இடத்தில் ரோபினா ஆஸ்தி என்ற 99 வயது பாட்டி, விமானம் ஓட்டுவது தொடர்பான பாடங்களை பல வருடங்களாக கற்பித்து வந்தார். இவர் தற்போது விமான ஓட்டிகளுக்கான பயிற்றுவிப்பாளராக தனது கடைசி பாடத்தை நடத்தி முடித்துள்ளார். அதோடுமட்டுமில்லாமல் அவர் அந்த விமானத்தைை இயக்கியும் காட்டி உள்ளார். இதன்மூலம் உலகின் மிக வயதான விமான பயிற்றுவிப்பாளர், விமானி, என தனது நிலையை உறுதிப்படுத்தி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன் அமெரிக்காவின் அயோவா மாகாணத்தை சேர்ந்த 98 வயதான ஆண்தான் உலகின் வயதான விமான பயிற்றுவிப்பாளர், விமானி என்ற சாதனையை வைத்திருந்தார்.அந்த சாதனையை இப்போது ரோபினா ஆஸ்தி முறியடித்துவிட்டார். அவரை அவரது மாணவர்கள் பாராட்டியுள்ளனர். பிராண்டன் மார்டினி என்ற மாணவர் இதுபற்றி கூறுகையில், “1000 மணி நேரத்தில் நான் கற்றுக்கொள்ள முடியாத விஷயங்களை ரோபினா ஆஸ்தி எனக்கு கற்று தந்துள்ளார்” என குறிப்பிட்டு கூறினார்.