உசிலம்பட்டியில் கிணற்றில் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறை வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செல்லம்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மகன் முருகன்.. விவசாயியான முருகன் தனது 5 மாத சினைவுற்றிருந்த பசுமாட்டை மேய்ச்சலுக்காக அவரின் தோட்டத்தில் கட்டி வைத்து விட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில் எதிர்பாராத விதமாக தோட்டத்திலிருந்த கிணற்றுக்குள் பசுமாடு தவறி விழுந்துள்ளது. அதனைக் கண்ட கண்ணன் உடனடியாக உசிலம்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் தங்கம் மற்றும் முன்னணி தீயணைப்பு வீரர் மணிகண்டன் ஆகியோர் தலைமையிலான மீட்புக் குழுவினர் பசு மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் உதவியுடன் பசுமாட்டை பாதுகாப்பாக மீட்டனர். இதையடுத்து முருகனின் தாய் பாண்டியம்மாள், பசுமாட்டை உயிருடன் பாதுகாப்பாக மீட்டுக்கொடுத்த தீயணைப்புத்துறை வீரர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார்.