கூண்டுக்குள் 8 மாதமாக அடைப்பட்டிருந்த அரிசி ராஜா என்ற யானை தற்போது திறந்து விடப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் அருகே 2017ஆம் ஆண்டு ஜூன் 2ம் நாள் ஒரு காட்டு யானை நான்கு பேரை மிதித்துக் கொன்றது. இது பற்றி தகவலறிந்து விரைந்துவந்த வனத்துறையினர் மயக்க ஊசி போட்டு அந்த யானையைப் பிடித்தனர். அதில் மூவர் படுகாயமடைந்தனர். அதையடுத்து ஜூன் 3ஆம் தேதி அந்த காட்டுயானையை வரகழியாறு வனப்பகுதியில் விட்டு விட்டனர். அதைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி அர்த்தநாரிபாளையம், நவமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் விளைநிலங்களை பாலாக்கிய காட்டு யானை ஒன்று அப்பகுதியில் வசித்து வந்த 7 வயது சிறுமியை கொன்றது. அந்தச் சோகத்திலிருந்து மீளாத நேரத்தில் மீண்டும் மே 26ஆம் தேதி முதியவர் ஒருவர் அந்த யானையால் கொல்லப்பட்டார்.
இதனால் வனத்துறையினர் சுயம்பு, பரணி எனும் இரு கும்கி யானைகளின் உதவியோடு காட்டு யானையை பிடிக்கும் முயற்சியில் மே 29ஆம் தேதி இறங்கினர். இதனிடையில் நவம்பர் 9ஆம் தேதி அர்த்தநாரிபாளையத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் எனும் விவசாயி அதே யானையால் கொல்லப்பட்டார். அதன் பின்னர் அந்த காட்டு யானையின் உடைய அட்டகாசம் பெரும் பேசுபொருளானது. அந்த யானை அரிசியை விரும்பி உண்பதால் அரிசி ராஜா என அழைப்பட்டது. அதன்பின் வனத்துறையினர் யானைப் பிடிக்கும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்றது.
ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் மாரிமுத்து தலைமையில் மருத்துவக் குழுவினர், வன அலுவலர்கள் யானைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு நவம்பர் 14ம் தேதி நள்ளிரவு அரிசி ராஜா என்ற காட்டுயானையை பிடித்தனர். பிடிக்கப்பட்ட காட்டுயானை பொள்ளாச்சி டாப்ஸ்லிபில் உள்ள வரகழியாறு பகுதியில் மரக்கூண்டில் அடைக்கப்பட்டு கவனிக்கப்பட்டு வந்தது. எட்டு மாதமாக கூண்டில் அடைக்கப்பட்ட அரிசி ராஜாவுக்கு பாகன்கள் கட்டளைக்கு அடிபணிந்து உணவு உட்கொள்ளுதல், கட்டுப்படுதல் உள்ளிட்டப் பயிற்சிகள் அளித்துவந்தனர். அதன்பின் ஜூலை 21ஆம் தேதி வெளியே விடுவிக்கப்பட்டு அரிசி ராஜாவிற்கு பூஜைகள் செய்து வரவேற்கப்பட்டது .
இது பற்றி ஆனைமலை புலிகள் காப்பக துணை கள இயக்குநர் சேவியர் ஆரோக்கிராஜ் கூறுகையில், “அரிசி ராஜாவிற்கு வனத்துறை சார்பில் முத்து என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது நல்ல ஆரோக்கிய நிலையில் உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். பாகன்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்துள்ளனர். வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி யானைகள் தின விழாவில் சின்னதம்பியுடன் அரிசி ராஜா (எ)முத்துவும் பங்கேற்பான் ” என்று கூறினார்.