தேசிய தலைநகரில் ஆம் ஆத்மியின் கெஜ்ரிவால் அரசு உத்தரவின் படி டீசல் விலை 82 ரூபாயிலிருந்து 73.56 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
டெல்லி தலைநகரில் டீசலின் விலை (ஜூலை 31) ரூ. 8.38 காசுகள் குறைந்து 73.56 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அனைத்து நகரங்களிலும் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்திருக்கிறது. ஒரு மாதத்திற்கும் மேலாக பெட்ரோல் விலையை விட தொடர்ந்து அதிக விலையில் உச்சத்தில் இருந்த டீசல் விலை ஆனது, ஆம் ஆத்மியின் கெஜ்ரிவால் அரசு 30 விழுக்காடாக இருந்து வந்த மதிப்பு கூட்டு வரியினை 16.75 விழுக்காடாக குறைத்துக் கொண்டதால் இந்த விலை இறக்கம் நிகழ்ந்திருக்கிறது. ஜூன் மாதத்தில் தொடர்ந்து 18 நாட்களுக்கு மேலாக எரிபொருட்களின் விலைகள் அனைத்தும் உயர்த்தப்பட்டு வந்தன. டீசல் விலை லிட்டருக்கு ரூ.10.48 ஆகவும், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.50 ஆகவும் அதிகரித்து இருந்தது.
இத்தகைய விலை குறைப்பு பற்றி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்,கூறியதாவது, “டெல்லியின் பொருளாதாரத்தை உயர்த்துவது மிக கடினமான சவாலாக இருந்து வருகிறது.இருந்தாலும் மக்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் சவால்கள் அனைத்தையும் விரைவில் முறியடிப்போம். டீசல் விலை தற்போது லிட்டருக்கு 82 ரூபாயில் இருந்து 73.64 ரூபாயாக குறையும். டெல்லி நகரத்திலுள்ள வர்த்தகர்களுக்கும் மற்றும் தொழிலதிபர்களுக்கும் இந்த விலை குறைப்பை பற்றி கோரிக்கை விடுத்திருந்தனர்” என்று தெரிவித்துள்ளார்.