கொடுத்த வாக்குறுதியின்படி தன்னுடைய கிராம மக்களுக்கு சாலை அமைத்துக் கொடுத்த கவுன்சிலரை அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து வாழ்த்தியுள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு பாத்தியமான ஒன்பதாவது வார்டு கவுன்சிலராக இருப்பவர் தமிழரசி. இவர் நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தனியாக நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தேர்தலின்போது சாத்தநத்தம் கிராம பொதுமக்கள் பொருள்கள் எடுத்துக்கொண்டு பயணம் செல்வதற்கும், விவசாய பொருள்கள் எடுத்துச் செல்வதற்கும் அருகிலுள்ள வேப்பூர் கிராமத்திற்கு ஐந்து கிலோமீட்டர் சுற்றி செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றால் சுமுகமாக சாலையில் செல்ல ஏற்பாடு செய்து கொடுப்பேன் என்று தமிழரசி வாக்குறுதி கொடுத்திருந்தார்.
கொடுத்த வாக்குறுதியின்படி வெற்றி பெற்ற கவுன்சிலர் தமிழரசி சாத்த நத்தம் கிராமத்தில் இருந்து வேப்பூர் செல்வதற்கு தனது சொந்த நிதியில் ரூபாய் 12 லட்சம் செலவு செய்து சாலை அமைத்துக் கொடுத்துள்ளார். இதன் மூலம் ஒரு கிலோ மீட்டர் தூரத்திலேயே அருகிலுள்ள வேப்பூர் கிராமத்திற்குச் சென்றுவர முடியும்.
சாலைப் பணிகள் முழுவதுமாக முடிந்து, நேற்று சாத்தநத்தம் வேப்பூர் சாலை திறந்து வைக்கப்பட்டது. வேப்பூர் ஒன்றிய பெருந்தலைவர் பிரபா செல்லப்பிள்ளை சாலையை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் தங்களுடைய நீண்ட நாள் கோரிக்கை மற்றும் கொடுத்த வாக்கினை நிறைவேற்றிய கவுன்சிலர் தமிழரசியை அப்பகுதி மக்கள் மாலை அணிவித்து வாழ்த்தினர்.