சென்னை அம்பத்தூரில் செல்போன் கடையில் இரும்பு ஷட்டர் பூட்டை உடைத்து 21 செல்போன்களை திருடிய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னை அம்பத்தூர், கிருஷ்ணாபுரம் சிடி.எச் சாலையில் சங்கீதா செல்போன் விற்பனை கடை இருக்கின்றது. அங்கு சுரேஷ் (28) என்ற நபர் மேலாளராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கடந்த ஜூலை 18 ஆம் தேதி மாலை சுரேஷ் வியாபாரம் முடித்துவிட்டு கடையை பூட்டிய பின்னர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
பின்னர் மறுநாள் காலையில் அவர் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் இரும்பு ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கு ஷோகேசில் வைக்கப்பட்டிருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான 21 செல்போன்கள் திருடப் பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. பின்னர் உடனடியாக இதுபற்றி அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
காவலர்கள் கடையில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் கொள்ளையர்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டனர். அதில் கொள்ளை செயலில் ஈடுபட்டது சென்னை, டி.பி.சத்திரம் பகுதியை சேர்ந்த ரவுடி ரூபன் (30) மற்றும் அவரது கூட்டாளி கார்த்திக் (24) என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து தனிப்படை காவல்துறையினர் இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் 12 செல்போன்களை மட்டுமே பறிமுதல் செய்துள்ளனர். அதன் மதிப்பு 4 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் இருவரையும் காவல்துறையினர் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.