கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய வாகனச் சந்தையில் 11 மாதங்களில் ஒரு லட்சம் கார்களை விற்று சாதனை படைத்துள்ளது.
ஒரு வாகனத்துடன் 2019ஆம் ஆண்டு இந்தியாவில் நுழைந்த கியா மோட்டார்ஸ் 11 மாதங்களில் ஒரு லட்சம் வாகனங்களை விற்று சாதனை படைத்துள்ளது. இதன் முதல் வாகனமான கியா செல்டோஸ் விற்பனையில் பழம்பெருமையான நிறுவனங்களுக்கு பெரும் போட்டியாக இந்திய வாகனச் சந்தையில் பார்க்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு அறிமுகமான கியா மோட்டார்ஸ் யுவிஒ கனெக்டெட் தொழில்நுட்பத்தை தனது செல்டோஸ், கார்னிவல் ரகங்களில் வழங்கி வருகிறது.
யுவிஒ கனெக்டெட் தொழில்நுட்பம் சந்தையில் பல்வேறு பிரிவுகளில் 50 புதிய அம்சங்களை கொண்டுள்ளது. இதில் புது அம்சமாக யுவிஒ வாய்ஸ் அசிஸ்ட் வேக்-அப் கமாண்ட் அம்சம் இருக்கிறது. இதை செயல்படுத்த வேண்டும் என்றால் ” ஹெலோ கியா” என கூறினால் போதும்.
முதல் இரண்டு ரகங்களான செல்டோஸ், கார்னிவல் ஆகியவற்றைத் தொடர்ந்து கியா மோட்டார்ஸ் அறிமுகம் செய்யவிருக்கும் கியா சொனெட் மாடலிலும் யுவிஒ கனெக்டெட் தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய சொனெட் மாடல் அறிமுகமாகும் போதே இன்டெலிஜன்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் வசதி கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
இன்டெலிஜண்ட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் என்பது பயனர் கியர்களை மாற்ற மேனுவல் கிளட்ச் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. புதுவித டிரான்ஸ்மிஷன் தவிர கியா சொனெட் ரக கார்களில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட இருப்பதாக கியா மோட்டார்ஸ் தெரிவித்து உள்ளது.