புதுசேரியில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இரவு 9 மணிமுதல் காலை 5 மணிவரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை ஆறு கட்ட நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அதற்கான கால வரையறை நேற்றுடன் முடிந்த நிலையில், மீண்டும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழகம் உட்பட பல மாநில அரசுகள் உத்தரவிட்டு வருகின்றனர். அந்த வகையில், புதுச்சேரியிலும், ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் எனவும், இந்த நேரங்களில் பொதுமக்கள் யாரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளுக்கு மட்டும் இரவு 9 மணி வரை கடையை திறந்து வைத்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தியேட்டர்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றை ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை திறக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.