அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு தடைவிதித்து அதற்கு பதில் மாற்று செயலியை கொண்டுவருவது பற்றி டிரம்ப் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
லடாக் எல்லைப் பகுதியில் சென்ற ஜூன் மாதம் 15ஆம் தேதி இந்தியா மற்றும் சீனா ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். அதனால் எல்லையில் பெரும் போர் பதற்றம் நிலவியது. எல்லையில் நடந்த தாக்குதலை தொடர்ந்து, சீனாவின் பொருட்களை இந்தியா முழுவதுமாக புறக்கணிக்க வேண்டும் எனவும் சீன நிறுவனங்களின் செல்போன் செயலிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன.இதனால் தேச நலனுக்கு எதிராக தனிநபர் தரவுகள் பகிரப்படுவதில் ஆபத்து இருப்பதாக கூறி டிக் டாக் உள்ளிட்ட பல்வேறு சீன செயலிகளுக்கு இந்தியா முழுவதுமாக தடை விதித்துள்ளது.
இந்நிலையில் சீனாவின் செயலியான டிக்டாக்கை தடை செய்வது பற்றி ஆலோசனை மேற்கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக கொரோனா தொற்றினை உலகமுழுவதும் பரப்பியதாக கூறி சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருந்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் பெரும் மோதல் உருவாகி இருக்கிறது. இந்நிலையில் சீனாவின் செயலியான டிக்டாக்கை தடை செய்ய இருப்பதாக டிரம்ப் கூறியுள்ளார். டிக் டாக் செயலிக்கு பதிலாக வேறொரு மாற்று செயலியை உருவாக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், டிக் டாக் நிறுவனத்தின் அமெரிக்க செயல்பாடுகளை மட்டும் வாங்குவதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.