அடுக்குமாடி குடியிருப்பில் கல்லூரி மாணவன் பெட்ரோல் பாம் வீசியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மீனம்பாக்கம் அடுத்த பழைய பல்லாவரத்தில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இருக்கின்றது. அந்தக் குடியிருப்பில் விஜயகுமார் (25) என்ற நபர் தனியாக வீடு எடுத்து வாடகைக்கு வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கின்ற தனியார் கல்லூரி ஒன்றில் பிசிஏ மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நேற்று இரவு அடுக்குமாடி குடியிருப்பின் காவலரிடம், விஜயகுமார் தன்னுடைய நண்பர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என கேட்டிருக்கிறார். காவலாளி அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் தகராறு முற்றியதால் விஜயகுமார் காவலாளியை கடுமையாக தாக்கியுள்ளார். அதனைக் கண்ட குடியிருப்புவாசிகள் அவரை தடுத்து கண்டித்து அனுப்பியுள்ளனர். கோபமடைந்த விஜயகுமார் மாடியில் உள்ள வீட்டிற்குச் சென்று, மூன்று நெகிழிப் பைகளில் பெட்ரோலை முழுவதுமாக நிரப்பி, அதில் ஆட்டோ பாம் என்ற பட்டாசை கொளுத்தி, மேலிருந்து கீழே வீசி வெடிக்க வைத்துள்ளார்.
மிக பயங்கர சத்தத்துடன் அது வெடித்ததால், குடியிருப்பில் இருந்த அனைவரும் அலறி அடித்துக்கொண்டு வெளியே வந்து இருக்கின்றனர். இந்த சம்பவத்தில் குடியிருப்பின் கீழ் பகுதியில் குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்த பெண்ணும் அவரின் குழந்தையும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். பின்னர் இதுபற்றி பல்லாவரம் காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஐ கண்டதும் விஜயகுமார் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அதன்பிறகு அவரது அறைக்குள் சோதனையிட்ட போது 15-ற்கும் மேற்பட்ட மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய விஜயகுமாரை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கின்றனர்.