புதிய கல்விக் கொள்கை குறித்து கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு புதியதாக அமலுக்கு கொண்டு வர உள்ள புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதற்கு காரணம் இருமொழிக் கொள்கையை தவிர்த்து மும்மொழிக் கொள்கையை இந்த புதிய கல்வி கொள்கை ஆதரிப்பதால் தான். இதுகுறித்து நடிகர் சூர்யா ஓராண்டுக்கு முன்பே எதிர்ப்பு தெரிவித்து 10 கேள்விகளை கேட்டார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதை தொடர்ந்து பல பிரபலங்கள் ஏற்கனவே இதற்கு எதிராக குரல் கொடுத்த போதிலும், மீண்டும் இதற்கு எதிராக தற்போது தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், கவிஞர் வைரமுத்து புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது கருத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அண்ணா-கலைஞர் இறுதி செய்ததும், எம்ஜிஆர்-ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழி கல்விக் கொள்கை தான். முதலமைச்சர் பழனிசாமி அரசும் அதை தாங்கிப் பிடிக்க தயக்கம் காட்ட தேவையில்லை. தேசியக்கொடியை மதிப்போம் திராவிட கொடியையும் பிடிப்போம் என கூறியுள்ளார்.