வேலூர் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகைக்கு பசு மாடுகள் குர்பானி கொடுக்க இருந்ததை தடுத்து நிறுத்திய காவலர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
நாடு முழுவதிலும் இன்று இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. பக்ரீத் பண்டிகை அன்று ஒட்டகம், ஆடு, மாடுகளை குர்பானி கொடுப்பது இஸ்லாமியர்களின் வழக்கம். ஆனால் இந்த வருடம் ஒட்டகம் மற்றும் பசு மாட்டினை குர்பானி கொடுப்பதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஊசூர் அடுத்த பூதூர் பகுதியில் இருக்கின்ற இஸ்லாமியர்கள் அறக்கட்டளை சார்பாக 80 பசுமாடுகளை ஒன்றாக குர்பானி கொடுக்க இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, சம்பவ இடத்திற்குச் சென்ற கால்நடை பராமரிப்பு துறை மற்றும் அரியூர் காவல்துறையினர், அங்கு ஆய்வு மேற்கொண்டபோது 80 மாடுகளை குர்பானி கொடுக்க இருந்தது தெரியவந்துள்ளது. பின்னர் இது பற்றி அறக்கட்டளை நிர்வாகிகளுடன் அரசு அலுவலர்கள் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அரசு உத்தரவை மீறி தாங்கள் குர்பானி கொடுக்க மாட்டோம் என்று அவர்கள் உறுதி கூறியதை அடுத்து, அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்கள்.