இயக்குனர் முருகதாஸ் ரஜினி இணையும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்துக்கு கடைசியாக பேட்ட திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இதையடுத்து நடிகர் ரஜினி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் என்றும் , அரசியல் மற்றும் சமூக கருத்துக்களைக் கொண்ட படமாக உருவாகவுள்ள அந்த படத்தில் நடிகை நயன்தாரா ஒப்பந்தம் ஆகியுள்ளார் என்றும் பேசப்பட்டது. மேலும் சந்திரமுகி, குசேலன் திரைப்படத்துக்கு பிறகு நடிகை நயன்தாராவுடன் மீண்டும் ரஜினி நடிக்கிறார்.
ரஜினிகாந்தின் 167வது படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். ’பேட்ட’ படத்துக்குப் பிறகு மீண்டும் அனிருத் இந்த படத்தில் இசை அமைக்கிறார். இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் 1980களில் வரும் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் விரைவில் ஷூட்டிங் தொடங்கும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மேலும் தர்பார் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டரும் வெளியாகியுள்ளது. வெளியாகிய போஸ்டர் முழுக்க முழுக்க போலீஸ் தொடர்புடையதாக அமைந்துள்ளது.
மும்பையில் நடக்கின்ற போலீஸ் கதையாக தர்பார் படம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. தர்பார் திரைப்படம் வருகின்ற 2020 பொங்கலுக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த போஸ்டரில் ஆங்கில வாசகம் இடம் பெற்றுள்ளது. அந்த வாசகங்களில் “நான் நல்லவனா, கெட்டவனா, மோசமானவனா இருக்கிறத நீயே முடிவு பண்ணிக்கோ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் போலீஸ், சமூக சேவகர் என இரண்டு வேடங்களில் நடிகர் ரஜினி நடிக்க இருப்பதாகவும் பேச்சு அடிபட்டு வருகின்றது.