Categories
மாநில செய்திகள்

48 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள ஏழு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் அடுத்த 48 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, வட தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், சென்னை மற்றும் அதைச்சார்ந்த புறநகர் பகுதிகள் மேகமூட்டத்துடன் காணப்படும்.

மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா, அந்தமான் தெற்கு, மத்திய வங்கக் கடல் பகுதிகளில் பலத்தக் காற்றும், கடலோர கர்நாடகா, லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபிக் கடல் உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளி காற்றும் வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |