போட்ஸ்வானாவில் சென்ற இரண்டு மாதங்களாக 350க்கும் அதிகமான யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகிலேயே அதிக யானைகளை கொண்ட நாடுகள் பட்டியலில் போட்ஸ்வானா முதலிடத்தில் இருக்கிறது. அந்த நாட்டில் ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேலான யானைகள் இருக்கின்றன. இந்த நிலையில் அந்நாட்டின் ஒகவாங்கோ டெல்டா பகுதியில் இருக்கின்ற காடுகளில் சென்ற மே மாதம் முதல் ஜூலை வரையில் 350க்கும் மேலான யானைகள் மர்மமான முறையில் இறந்துள்ளதை விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டறிந்துள்ளனர். உயிரிழந்த யானைகளின் தந்தங்கள் எதுவும் வெட்டி எடுக்கப் படாத காரணத்தால் அவைகள் வேட்டையாட படவில்லை என தெரிகின்றது.இருந்தாலும் பெரும்பாலான யானைகள் செங்குத்தாக தரையில் விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்து இருக்கின்றன. அதனால் நரம்பியல் தொடர்புடைய நோய்கள் ஏதாவது யானைகளுக்கு பரவியிருக்கலாம் இல்லை கொரோனா தொற்று யானைகளுக்கும் பரவி இருக்கலாமா என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
மேலும் சில யானைகள் பாதை தெரியாமல் உடல் நிலை மோசமான நிலையில் ஒரே இடத்தில் தொடர்ந்து சுற்றிக் கொண்டே கீழே விழுந்து உயிரிழந்திருக்கின்றன. இதனைத் தொடர்ந்து உயிரிழந்த யானைகளின் உடல்களிலிருந்து பரிசோதனை மாதிரிகள் எடுக்கப்பட்டு, அவைகள் ஆய்வு மேற்கொள்வதற்காக தென்னாப்பிரிக்கா, ஜிப்பாப்வே, கனடா போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருகின்றன. இந்த நிலையில் பரிசோதனை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் யானைகளுக்கு தொற்றுநோய் பரவியதால் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்திருக்கிறது. தேங்கிக் கிடக்கின்ற தண்ணீரை யானைகள் குடிக்கும்போது அதில் இருக்கின்ற கொடிய பாக்டீரியா கிருமிகள் யானைகளுக்கு பரவுகிறது.அந்த நச்சு நிறைந்த பாக்டீரியா கிருமி மூலமாக நோய் தொற்று உண்டாகி இயற்கையான நச்சு மூலமாகவே யானைகள் இறந்துள்ளதாக ஆய்வில் கூறியுள்ளனர். இந்த சம்பவம் பற்றி அடுத்த கட்ட விசாரணை நடைபெற்று வருவதாக போட்ஸ்வானா வனவிலங்குகள் நலத்துறை தகவல் அளித்துள்ளது.