தர்மபுரியில் பெண் வீட்டார் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்த இளைஞர் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள ஓட்டத்தினை கிராமத்தை சேர்ந்த விஜி, அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆரம்பம் முதலே இந்த காதலுக்கு பெண் வீட்டார் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் கடும் எதிர்ப்பை மீறி கடந்த 6 மாதத்திற்கு முன் ராஜேஸ்வரியை விஜி திருமணம் செய்துள்ளார். பெங்களூரில் காய்கறி கடை நடத்தி வந்த விஜி கொரோனா ஊரடங்கால் வியாபாரம் இல்லாததால் வருமானம் இன்றி தவித்து வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் விஜியை தொடர்பு கொண்ட அவரது மனைவி ராஜேஸ்வரி தந்தை, காய்கறி வியாபாரத்தை விட்டுவிட்டு தன்னுடன் வந்து ரியல் எஸ்டேட் தொழிலை செய்யுமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து நேற்று முன்தினம் தனது மாமனாரை பார்க்கச் சென்ற விஜி வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் கும்மனூர் அருகே சாலையோரம் வாலிபர் விஜி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்த பஞ்சப்பள்ளி போலீசார், திருமணம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையில் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் முதல் கட்ட விசாரணை தொடங்கியுள்ளனர். விஜய்யின் மாமனார் தலைமறைவாகி இருப்பதால் அவரை பிடிக்கவும் தீவிரம் காட்டியுள்ளனர். காதல் திருமணம் செய்த வாலிபர் சடலமாக மீட்கப்பட்டது தர்மபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.