குடிமராமத்து பணி டெண்டருக்காக அமைச்சருக்கு ரூ.21 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளேன் என ஒப்பந்ததாரர் ஒருவர் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தோக்கவாடி ஏரி குடிமராமத்து பணிக்காக டெண்டர் விடப்பட்டு ரூ. 98 லட்சம் மதிப்பீட்டில் வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த டெண்டரை ஆணைமங்கலம் பகுதியைச் சேர்ந்த சங்கர் மாதவன் என்பவர் எடுக்க முன்வந்த போது தோக்கவாடி, ஆயக்கட்டு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் சங்கர் மாதவன் அதே பகுதியைச் சேர்ந்த கோளன் என்பவரது பெயரில் டெண்டரை எடுத்து, பணிகளை உதவியாளர் குமார் என்பவரை வைத்து செய்துவருகிறார்.
இந்நிலையில் அவரின் டெண்டர் பணிகள் தரமில்லாமல் இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் சங்கர் மாதவன் இந்த டெண்டரைக் கைப்பற்ற அமைசருக்கு ரூ. 21 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் என பேசியது தொடர்பான ஆடியோ சமூக வலைதலங்களில் வைரலாக பரவிவருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் தோக்கவாடி ஏரி மட்டுமில்லாமல், கரியமங்கலம் ஏரி உள்ளிட்டப் பல்வேறு பணிகளுக்கான டெண்டர்களையும் சங்கர் மாதவன் லஞ்சம் கொடுத்து வாங்கி இருக்கலாம் என சந்தேகித்து வருகின்றனர்.
மேலும் தரமற்றப் பணிகளை செய்யும் ஒப்பந்ததாரர்களை அரசு அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் இருப்பதன் காரணம் என்ன? எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அமைச்சருக்கு 21 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்திருப்பதாக கூறும் அவர் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது? எனவும் கேள்வி எழுப்பி உள்ளனர்.ஆகவே, மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.