சென்னையில் இன்று 1,074 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1 லட்சத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வருகின்றது. இந்த நிலையில்தான் இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாயின.
அதில்,மேலும் 5,879பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 2,51,738 ஆக உள்ளது. அதிகபட்ச பாதிப்பாக தலைநகர் சென்னையில் இன்று மட்டும் 1,074 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,00,877 ஆக உள்ளது. இன்று மேலும் 99 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த உயிரிழப்பு 4,034 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 7,010பேர் குணமடைந்ததால் மொத்த எண்ணிக்கை 1,90,966 ஆக உயர்ந்துள்ளது.