பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ, பயம் கொள்ளாமல் கொரோனாவை எதிர் கொள்ளுங்கள் என மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளார்.
பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கொரோனா பாதிக்கப்பட்டு 3 வார சிகிச்சைக்குப் பின்னர் மீண்டுள்ளார். இந்நிலையில் கொரோனாவை கண்டு பிரேசில் மக்கள் எவரும் அச்சம் கொள்ள வேண்டாம் என ஜெய்ர் போல்சனாரோ அறிவுறுத்தியுள்ளார். இதுபற்றி பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கூறும்போது, “நான் ஒரு நாள் கொரோனாவால் நிச்சயம் பாதிக்கப்படுவேன் என்று எனக்கு நன்றாக தெரியும். துரதிர்ஷ்டவசமாக அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்று நான் நினைக்கிறேன்.
நீங்கள் எதற்காக பயம் கொள்கிறீர்கள். அதனை நேருக்கு நேர் எதிர் கொள்ளுங்கள். நான் மரணங்களுக்கு வருத்தப்படுகிறேன். ஆனால் ஒவ்வொரு நாளும் மக்கள் இறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அதுதான் வாழ்க்கை” என கூறியுள்ளார். சென்ற சில தினங்களாக பிரேசிலில் 50 ஆயிரத்திற்கும் மேலானவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு 20 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று கடந்த சனிக்கிழமை உடல்நலம் தேறி வீடு திரும்பிய நிலையில், அவரது மனைவிக்கும் தற்போது கொரோனா உறுதியாகியுள்ளது.
தற்போது மிச்செல் போல்சனாரோ தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டிருக்கிறார். அவர் நல்ல உடல்நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாக அதிபர் மாளிகை தெரிவித்திருக்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அமெரிக்கா முதலிடத்திலும் அதனைத் தொடர்ந்து பிரேசில் இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன. பிரேசிலில் 24 லட்சத்திற்கும் மேலான மக்கள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.