பிரதமர் மோடி புதிய கல்விக் கொள்கை திட்டத்தைப் பற்றி காணொளியில் பேசும்பொழுது வேலை தேடுபவர்களை விட வேலை கொடுப்பவர்கள் உருவாக்க வேண்டும் என திட்டவட்டமாக கூறியுள்ளார்.
வேலை தேடுபவர்களுக்கு பதிலாக வேலை கொடுப்பவர்களை உருவாக்க வேண்டும் என்பதை புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலகில் இதுவரை நடந்திராத ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் இறுதிப் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த ஹேக்கத்தான் போட்டி, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில், பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் மற்றும் ஐ4சி ஆகியவற்றின் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் அண்மையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கை குறித்து பேசினார். அதில் கூறியதாவது, “புதிய கல்விக் கொள்கைக்கு சமீபத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கல்வி, விளையாட்டுத்துறையில் உலகத்தரத்திற்கு நிகரான வசதிகளை உருவாக்க வேண்டும். இந்தியாவின் கல்வித்திட்டம் புதுமையாகவும், நவீனமாகவும் இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். கற்றல், ஆய்வு, புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தவே புதிய கல்விக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதுமை, ஆராய்ச்சி, வளர்ச்சி இவற்றிற்கு முக்கியத்துவம் தர வேண்டும். இது 21-ம் நூற்றாண்டின் தேவைக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் 21ம் நூற்றாண்டில் இளைஞர்களின் ஒளிமயமான வளர்ச்சியை மனதில் வைத்து இந்த கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கை, மனப்பாட முறையில் இருந்து வேறுபட்டு சிந்தனை முறைக்கு வழிவகுத்துள்ளது. தாய்மொழி மூலம் படித்து மாணவர்கள் கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டும். வேலை தேடுபவர்களை உருவாக்காமல், வேலை கொடுப்போரை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது’’ என பிரதமர் மோடி கூறினார்.