தென்காசி அருகே கூலித் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை அடுத்த இந்திராநகர் ஏரியாவில் வசித்து வந்தவர் செல்லதுரை. கூலித் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவருக்கும் இடையே இடம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு அது பகையாக மாறியுள்ளது.
இந்நிலையில் வழக்கம்போல் இடப்பிரச்சனை செல்லதுரைக்கும், குமாரசாமிக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு வாக்குவாதம் ஏற்பட, திடீரென சண்டை முற்றி ஆத்திரமடைந்த மாடசாமி செல்லதுரையை அங்கிருந்த கூட்டாளிகளுடன் சேர்ந்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்துள்ளார்.
பின் இது குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட, சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் உடனடியாக தொழிலாளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து குற்றவாளிகளை பிடிப்பதில் காவல்துறை அதிகாரிகள் தாமதம் செய்ததால்,
ஆத்திரமடைந்த உறவினர்கள் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் உடனடியாக சென்று உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் அளித்த புகாரின் பேரில் முக்கிய குற்றவாளியான மாடசாமி உட்பட 5 பேரை கைது செய்தனர். தற்போது அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.