கொரோனா பரிசோதனை முடிவு கிடைப்பதற்காக 60 கிலோமீட்டர் கணவருடன்அலைந்து திரிந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது.
பெங்களூருவில் கொரோனா தொற்று தனது வீரியத்தை தினந்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை கிடைப்பதிலும், பிற நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைப்பதிலும் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக கர்ப்பிணிகள் அனைவரும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பெங்களூரு புறநகர் ஒசகோட்டேயை சேர்ந்த பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்த நிலையில் அவருக்கு பிரசவ தேதி குறிக்கப்பட்டு இருந்தது.
இதனிடையே அந்த கர்ப்பிணி பெண் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்துகொண்டுள்ளார். ஆனால் அந்த பரிசோதனை முடிவு இன்னும் கிடைக்காத நிலையில் பிரசவத்திற்காக அவர் பெங்களூரு வாணிவிலாஸ் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்குள்ள மருத்துவர்கள், கொரோனா பரிசோதனை அறிக்கை எங்கே என கேட்டு அப்பெண்ணை திருப்பி அனுப்பி வைத்தனர். இதனால் சென்ற புதன்கிழமை முதல் கர்ப்பிணி தனது கணவருடன், கொரோனா பரிசோதனை அறிக்கை வாங்க விக்டோரியா அரசு மருத்துவமனை, சுகாதாரத் துறை அலுவலகம், மாநகராட்சி அலுவலகம் என 60 கிலோ மீட்டர் தூரம் அலைந்து திரிந்திருக்கிறார்.
அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை பெற்றெடுக்க மருத்துவர்கள் ஏற்கனவே குறித்து கொடுத்து தேதி நேற்று ஆகும். கொரோனா பரிசோதனை முடிவு வராததால் மீண்டும் வாணிவிலாஸ் மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக சென்றுள்ளார். கொரோனா பரிசோதனை முடிவிற்காக கர்ப்பிணி பெண் அலைக்கழிக்கப்பட்ட சம்பவம் சமூகவலைத்தளங்களிலும், கன்னட செய்தி தொலைக்காட்சிகளிலும் வெளியாகி உள்ளது. இதையடுத்து நேற்று வாணிவிலாஸ் மருத்துவமனையில் அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து குழந்தை வெளியே எடுக்கப்பட்டது. தற்போது தாயும், சேயும் நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.