அமெரிக்காவின் விமானப் பயணத்தின் போது இரண்டு பயணிகள் முகக்கவசம் அணியாத காரணத்தால் விமானம் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் திரும்பி வந்த சம்பவம் விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் இருப்பதால் அந்நாட்டில் இருக்கின்ற பல்வேறு விமான நிறுவனங்கள் பயணிகளின் பாதுகாப்பை கருதி பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதில் குறிப்பாக தனியார் விமான நிறுவனமான டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் மிகவும் உறுதியான நடைமுறைகளை பின்பற்றி வருகின்றது. டெல்டா விமானத்தில் பயணம் மேற்கொள்பவர்கள் பயணத்தின் போது கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும் விமானத்திலும் விமான நிலையத்திலும் முககவசம் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். இந்த நிலையில் இந்த கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட இரண்டு பயணிகளால் டெல்டா விமானம் நடுவானில் தனது பயணத்தை பாதியில் நிறுத்திக் கொண்டு புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் திரும்பிச் சென்றது.
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணம் டிட்ரோயிட் நகரில் இருந்த ஜார்ஜியா மாகாணத்தில் இருக்கின்ற அட்லாண்டா நகருக்கு சென்ற 23ம் தேதி டெல்டா விமானம் புறப்பட்டு சென்றது. கொரோனா பரவல் காரணமாக பயணிகள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று விமானம் ஊழியர்களால் அறிவுறுத்தப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும்போது பயணிகளில் இரண்டு நபர்கள் தாங்கள் முக கவசம் அணிய மாட்டோம் என்று விமான ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். அந்த இரு பயணிகளிடமும் பயணத்தின் போது நீங்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று விமான ஊழியர்கள் அறிவுறுத்தினர்.இருந்தாலும் ஊழியர்களின் அத்தகைய கோரிக்கையை நிராகரித்த இரண்டு பயணிகளும் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த பிரச்சனை பற்றி ஊழியர்கள் விமானியிடம் கூறியுள்ளனர்.அதனைத் தொடர்ந்து அட்லாண்டா நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானம் நடுவானில் பாதி வழியிலேயே தனது பயணத்தை முடித்துக் கொண்டு மீண்டும் புறப்பட்ட இடமான டிட்ரோயிட் நகருக்கே திரும்பி வந்தது. அங்கு தரையிறக்கப்பட்ட விமானத்தில் இருந்த அந்த இரண்டு பயணிகளும் இறக்கிவிடப்பட்டனர்.மேலும் அவர்களிடம் முகக்கவசம் அணிய வில்லை என்றால் விமானத்தில் பயணிக்க அனுமதி கிடையாது என்று அறிவுறுத்தப்பட்டது. இரண்டு பயணிகளும் விமான நிலையத்தில் இறக்கிய பிறகு டெல்டா விமானம் மீண்டும் அட்லாண்டா நோக்கி தனது பயணத்தை மேற்கொண்டது.