கேரள மாநிலத்தில் முஸ்தபா என்பவரும் அவரது மனைவியும் தங்கள் மகனுடன் பிளஸ் டூ தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்திருக்கிறது.
கேரள மாநிலத்தில் தொழிலதிபரான முஸ்தபாவுக்கு, அவரது பெற்றோர் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவியான நுசைபாவை திருமணம் செய்து வைத்திருக்கின்றனர். பல ஆண்டுகள் கடந்து இருந்தாலும் திருமணம் தடைப்பட்டுப் போன தனது படிப்பு பற்றிய கவலையில் தான் வாழ்ந்து வந்திருக்கிறார் நுசைபா. இந்த வயதிலும் படிப்பு பற்றி கவலைக் கொள்ளும் தன் மனைவியின் ஆர்வத்தை முஸ்தபா புரிந்து கொண்டார். காரணம் என்னவென்றால் அவரும் பத்தாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை நிறுத்தியுள்ளார்.
இதனால், மனைவியின் கவலையை போக்குவது மட்டுமல்லாமல் அவரும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுத முடிவு செய்து பயிற்சி மையங்களை அணுகியுள்ளனர். ஆனால் பயிற்சி மையங்கள் எதுவும் அவர்களுக்கு கைகொடுக்கவில்லை. அந்த சமயத்தில் கேரள எழுத்தறிவு மையத்தின் சமநிலை தேர்வுகள் பற்றி தங்கள் ஊரின் பஞ்சாயத்து அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பு பலகையில் எழுதி இருப்பதைப் பார்த்து முஸ்தபா மகிழ்ச்சி அடைந்தார். பின்னர் “இந்த வயதில் படிக்கிறோமே என்று ஆரம்பத்தில் கொஞ்சம் கூச்சபட்டோம். இருந்தாலும் தற்போது தேர்ச்சி அடைந்ததால் அனைவரும் பாராட்டுவதை கண்டு இனி வெட்கப்படக் கூடாது என்று முடிவு செய்ததாலேயே பட்டப் படிப்பை தொடர இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.