Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நான் நிரபராதி, கோர்ட் சொல்லிவிட்டது” நிம்மதியாக தூங்க போகிறேன்…. மகிழ்ச்சியில் உயிரைவிட்ட துணை தாசில்தார்…!!

துணை தாசில்தார் மீது இருந்த வழக்கில் சாதகமாக தீர்ப்பு வந்ததை அறிந்து மகிழ்ச்சியில்  உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும்  சுவாமிநாதன் துணை தாசில்தாராக பணியாற்றி கடந்த 2004-ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். இவர் பணியில் இருந்தபோது தூத்துக்குடி மற்றும் மீளவிட்டான் கிராமங்களில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்துக்கு போலி பட்டா வழங்கியுள்ளதாக 2003-ம் ஆண்டு இவர் மீது புகார் கொடுக்கப்பட்டது. இதுகுறித்து தனியாக குற்ற வழக்கையும் அவர் மீது போலீசார் பதிவு செய்தனர். சுவாமிநாதனை ஓய்வு பெற அனுமதித்தாலும், ஓய்வு பெறுவதற்கு முதல் நாள் அவரை மாவட்ட கலெக்டர், பணி இடைநீக்கம் செய்தார். அதன்பின் நடந்த துறை ரீதியான விசாரணையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு விட்டதாக கூறி, அவரின் ஓய்வூதிய தொகையில் இருந்து மாதம் 1000 ரூபாய் வீதம், 3 வருடம் பிடித்தம் செய்ய கடந்த 2010-ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.  இதற்குு எதிராக மதுரை ஐகோர்ட்டில் சுவாமிநாதன் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டீக்காராமன் சென்று 24ந்தேதி தீர்ப்பு அளித்தார். அந்தத் தீர்ப்பில், “மனுதாரர் சுவாமிநாதனுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. இவருக்கு எதிராக கடந்த 2010-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்கிறேன்” என்று கூறினார்.

இந்த தீர்ப்பு விவரத்தை சுவாமிநாதனிடம், அவரது வக்கீல் எச்.ஆறுமுகம் கூறியதை கேட்டு மகிழ்ச்சியடைந்த 74 வயதான சுவாமிநாதன், அந்த தீர்ப்பை குறித்து கூறுகையில்,” நான் நேர்மையான அதிகாரியாக பணியாற்றினேன். ஓய்வு பெறும் நேரத்தில் என் மீது இப்படி ஒரு அபாண்டமான குற்றச்சாட்டை சுமத்தினர். ஐகோர்ட்டே என்னை நிரபராதின்னு சொன்ன பிறகுதான், மகிழ்ச்சியாக இருக்கு, சாப்பிட்டுவிட்டு நிம்மதியாக தூங்க போகிறேன்” என்று கூறிவிட்டு மதியம் 12 மணிக்கு படுக்கையில் போய் படுத்தவர் அதன்பின் எழுந்திருக்கவில்லை. அவர் உயிர் தூக்கத்திலேயே அவரை விட்டு பிரிந்து விட்டது. இந்த தகவலை அவரது வக்கீல் ஐகோர்ட்டுக்கு கடிதமாக எழுதி தெரிவித்தார். அதில், “16 ஆண்டுகளாக தன் மீதான வீண் பழியால் மனவேதனை அடைந்துள்ள சுவாமிநாதன், நிரபராதி என்றதும், மன நிம்மதியுடன் நிரந்தரமாக தூங்கி விட்டார்” என்று கூறியுள்ளார். இந்த கடிதம் ஐகோர்ட்டு நீதிபதிகள், ஊழியர்கள் மத்தியில் ஒரு விதமான பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |