Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பசுமாட்டை காப்பாற்ற முயற்சித்த பெண் மின்சாரம் தாக்கி பலி…. உடன் சென்ற நாயின் பாசப் போராட்டம்….!!

பசு மாடுகளை காப்பாற்ற சென்ற பெண்ணின் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் அவரின் உடல் மீது உருண்டு புரண்டு நாயொன்று பாசப் போராட்டம் நடத்திய சம்பவம் காண்போரை கண் கலங்க செய்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ராஜகம்பீரம் பகுதியை சேர்ந்தவர் ராசு. இவருடைய மனைவி வேட்டைக்காள் (வயது 70). ராசுவின் மனைவி 3 பசுமாடுகளையும் ஒரு நாயையும் வளர்த்து வந்தார். பசுமாடுகளை தினந்தோறும் வயலில் மேய்ச்சலுக்காக விடுவார். அவர் வளர்த்து வந்த நாய்க்கு செல்லம் என பெயரும் வைத்திருந்தார். இந்த நாயானது, வேட்டைக்காள் மாடு மேய்க்க செல்லும்போதெல்லாம் அவருக்கு துணையாக கூடவே செல்லும். நேற்று முன்தினம் இரவில் மானாமதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. அப்போது, மின்வயர் ஒன்று அறுந்து வயல்காட்டில், ஒரு கம்பிவேலி மீது விழுந்து அந்த கம்பிவேலி முழுவதும் மின்சாரம் பாய்ந்திருந்தது.

நேற்று காலையில் வேட்டைக்காள் தனது 3 பசு மாடுகளையும் மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றிருந்தார். வழக்கம்போல் அவருடன் அந்த நாயும் சென்றிருந்தது. இந்த நிலையில், கம்பி வேலியின் அருகில் மேய்ந்து கொண்டிருந்த ஒரு பசுமாட்டின் மீதும் மின்சாரம் தாக்கி துடித்துக்கொண்டிருந்தது.  இதைக்கண்ட வேட்டைக்காள் அந்த மாட்டை காப்பாற்ற ஓடிச் சென்றபோது அவரும் அந்த மின்சாரம் பாய்ந்திருந்த மின்கம்பி வேலியில் சிக்கி  பரிதாபமாக உயிரிழந்தார். கம்பி வேலியில் சிக்கிய சினை மாடான பசுமாடும் சற்று நேரத்தில் பலியாகி விட்டது. இந்தநிலையில் வேட்டைக்காள் எழுந்து வராததை பார்த்த அவர் வளர்த்து வந்த நாய், அங்கும் இங்குமாக அலைந்து பரிதவிப்புடன் குரைத்துக் கொண்டிருந்தது.

மேலும் வேட்டைக்காளின் மற்ற 2 மாடுகளையும் மின்வேலி அருகே வரவிடாமல் விரட்டியபடியே குரைத்துக் கொண்டு இருந்தது.
இதற்கிடையே நாயின் இந்த செயலை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த சிலர் ஓடிவந்து பார்த்தபோது, வேட்டைக்காளும், பசுமாடும்  மின்சாரம் பாய்ந்த கம்பி வேலியில், சிக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. அதன்பின் மின்வாரியத்துக்கு தகவல் கொடுத்து, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. பின்னர் வேட்டைக்காள் உடல் மீட்கப்பட்டு இறந்து கிடந்த பசுமாடும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. அப்போது உறவினர்களோடு அந்த நாயும் வேட்டைக்காளின் உடல் மீது உருண்டு, புரண்டு பாசப்போராட்டம் நடத்தியது.

நாயின் இத்தகைய செயல் அங்கிருந்த அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது. அந்த நாயை மற்றவர்கள் பிடித்து அழைத்துச் செல்ல முயன்றபோதும், அவர்களுடன் செல்ல மறுத்து மீண்டும் வேட்டைக்காளின் உடலில் உருண்டு புரண்டு தனது துக்கத்தை வெளிப்படுத்தியது. மேலும் தன்னை பிள்ளை போல் வளர்த்து பார்த்துக்கொண்ட வேட்டைக்காள் மீது அந்த நாய் எந்த அளவுக்கு பாசமாகவும் விசுவாசமாகவும் இருந்தது என்பதை இந்த காட்சிகள் உணர்த்துவதாகவும் அமைந்தன.  இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் மானாமதுரை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |