Categories
தேசிய செய்திகள்

மோடி தனது நாடகத்தை முடித்துக் கொள்ள வேண்டும் – அசோக் கெலாட்

ராஜஸ்தான் அரசை கவிழ்க்க மோடி நடத்தும் நாடகத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்று அசோக் கெலாட் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதலமைச்சர் அசோக் கெலாட்க்கு எதிராக துணைத் தலைவர் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கி இருந்தார். அதனால் மத்திய பிரதேசத்தை தொடர்ந்து ராஜஸ்தானிலும் காங்கிரஸ் ஆட்சி தொடர்வதில் பெரும் சிக்கல் இருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அப்போது அதிருப்தி எம்எல்ஏக்களை திரும்ப ஏற்றுக்கொள்வீர்களா என்ற செய்தியாளர் கேள்விக்கு பதில் கூறிய அவர், “இது கட்சியின் தலைமை எடுக்கும் முடிவைப் பொருத்தது. கட்சித் தலைமை அவர்களை மன்னித்தால், நான் அவர்களை ஏற்றுக் கொள்வேன். கட்சித் தலைமை என் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறது. அந்த நம்பிக்கையில்தான் மத்திய அமைச்சரவை, காங்கிரஸ் தேசிய மற்றும் மாநில தலைவர், முதலமைச்சர் என்ற பல்வேறு பதவிகளை என்னை நம்பி அளித்திருக்கின்றனர்.

நான் மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றி வருகின்றேன். இதனைத் தாண்டி நான் என்ன செய்ய முடியும்? எங்களுக்கு எவருடனும் தனிப்பட்ட முறையில் எத்தகைய பிரச்சனையும் இல்லை. ஒரு ஜனநாயக நாட்டில், சித்தாந்த ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும்மோதல் நடைபெறலாமே தவிர அரசை கவிழ்க்க நடக்கக்கூடாது. இருந்தாலும் ராஜஸ்தான் அரசை கவிழ்ப்பதற்கு பாஜக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றது. இந்த நாடகத்தினை பிரதமர் மோடி முடித்து வைக்க வேண்டும். ராஜஸ்தான் அரசை கவிழ்க்க கூடிய திட்டத்தில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் நேரடியாக ஈடுபட்டிருக்கிறார். அதனால் தார்மீகப் பொறுப்பேற்று அவர் பதவி விலக வேண்டும்.நாட்டில் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி கொண்டிருக்கிறது” என்று கூறியுள்ளார்.அதே சமயத்தில் 200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தற்போது 107 உறுப்பினர்களின் ஆதரவு அசோக் கெலாட் அரசுக்கு இருக்கின்றது.

Categories

Tech |