சென்னையில் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை சேர்ந்த பிரியங்கா என்பவர் இன்ஜினீயரிங் பட்டதாரி. இவருக்கும் நிரேஷ்குமார் என்ற நபருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது.நிரேஷ்குமார் ஹைதராபாத்தில் வேலை செய்து வருவதால் திருமணத்திற்கு பிறகு இருவரும் அங்கேயே வசித்து வந்துள்ளனர்.இந்த நிலையில் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கணவரை பிரிந்து பிரியங்கா தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். அதனால் பெரும் மன உளைச்சலில் இருந்து வந்த பிரியங்கா கடந்த 29ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் பற்றி அறிந்த சிந்தாரிப்பேட்டை காவல்துறையினர் பிரியங்கா மரணம் பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின்போது தற்கொலைக்கு முன்னர் பிரியங்கா எழுதி வைத்த கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
அந்த கடிதத்தில், திருமணத்துக்கு வரதட்சணையாக நிரேஷ்குமார் மற்றும் அவரது தாயார் 120 பவுன் நகைகள் கேட்டனர். முதலில் 40 பவுன் நகைகள் போடப்பட்டு திருமணம் நடந்தது.மீதமுள்ள 80 பவுன் நகைகள் கேட்டு நிரேஷ் குமார் மற்றும் அவரது தாயார் என்னை மிகவும் கொடுமை செய்தனர். அதனால் அவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தேன். அதே சமயத்தில் எனது தந்தை மீண்டும் இருவரும் ஒன்றாக இணைந்து வாழவேண்டும் என்று நிரேஷ்குமாரிடம் ஒவ்வொரு நாளும் கெஞ்சுவதை பார்த்து எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. அவர் தினமும் கண்ணீர் விடுவதை என்னால் பார்க்க இயலவில்லை.நிரேஷ் குமார் மற்றும் அவரது தாயார் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால் தான், நான் இந்த முடிவினை எடுக்கிறேன் என்று எழுதி வைத்துள்ளார். இதனை தொடர்ந்து நிரேஷ்குமாரை கைது செய்த காவல்துறையினர் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.