திருவேற்காடு பகுதியில் மாணவர்களின் வீட்டுக்கே சென்று பாடம் நடத்தும் அரசு பள்ளி ஆசிரியருக்கு பெரும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பூந்தமல்லியை சேர்ந்த எழிலரசி என்ற ஆசிரியர், திருவேற்காடு அடுத்த புலியம்பேடு பகுதியில் இருக்கின்ற அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவர் ஊரடங்கு அரசுப்பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் மாணவர்களின் நலனை கருதியும், வேலை பார்க்காமல் வீட்டிலிருந்தே சம்பளம் வாங்க விரும்பாமலும் தான் பணிபுரிகின்ற அரசுப் பள்ளியில் பயிலும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் வீடுகளுக்கே சென்று பாடம் நடத்தி வருகிறார். அவர் மாணவர்களின் வீட்டுக்குச் சென்று அனைவரையும் ஒரே இடத்தில் கூட்டி மாணவர்களை அமரவைத்து தினமும் 2 மணி நேரம் பாடம் நடத்தி வருகிறார்.
பள்ளிகளில் பாடம் எடுப்பதை போலவே மாணவர்கள் அனைவரையும் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு வரவழைத்து சமூக இடைவெளியை பின்பற்றியும், முக கவசம் அணிந்தும், கைகளை சுத்தமாக கழுவியும் மற்றும் இறை வணக்கத்துடன் பாடம் நடத்துவதற்கு தொடங்குகிறார். மேலும் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதம் ஆகிய மூன்று பாடப் பிரிவுகளில் மட்டுமே பாடம் எடுத்து விட்டு, அந்தப் பாடங்களில் இருந்து மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் கொடுத்து வருகிறார். இதுகுறித்து ஆசிரியை எழிலரசி கூறுகையில், “இந்த மூன்று பாடப்பிரிவுகளை மட்டும் படித்தாலே ஓரளவிற்கு மாணவர்கள் அனைவரையும் கட்டாயம் தேர்த்தி விடலாம். ஊரடங்கு காரணமாக நான்கு மாதங்களுக்கு மேலாக படிக்காமல் இருந்து வந்த மாணவர்கள் அனைவரும் இனி வருகின்ற நாட்களில் தொடர்ந்து பாடம் நடத்த விட்டால் படிக்கும் திறனை முழுமையாக இழந்து விடுவார்கள்.
அதே சமயத்தில் விடுபட்ட பாடங்களை படித்து வந்தால் அடுத்த வகுப்பிற்கு செல்லும் போது மாணவர்களுக்கு மிகவும் எளிமையாக இருக்கும். கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக வேலை செய்யாமலே சம்பளம் வாங்கி வந்தது என் மனதை மிகவும் உறுத்தியது. அதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தற்போது குறிப்பிட்ட இடத்தில் மாணவர்களை ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறேன் என்று அவர் கூறியுள்ளார். மாணவர்களை மகிழ்விப்பதற்காக அவர்களுக்கு வேண்டிய பிஸ்கட், மிச்சர் வீட்ட சிற்றுண்டி களையும் ஆசிரியை எழிலரசி கையோடு எடுத்துச் சென்று வகுப்புகள் முடிந்தவுடன் மாணவர்களுக்கு சாப்பிட கொடுக்கிறார்.அதனால் மாணவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் படித்து வருகின்றனர். வாரத்தில் 5 நாட்கள் வகுப்பு நடத்தி வருகின்ற ஆசிரியை எழிலரசிக்கு, மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் அனைவரின் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.