அரியலூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் மேலராமநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் பழனிச்சாமி. அவரது மனைவி ஜெயமணி. இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து தங்களது பிழைப்பை நடத்தி வந்துள்ளனர். இவர்கள் இருவரும் சொந்தமாக மாடு ஒன்றை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு அவர் வளர்க்கும் மாடு திடீரென அலறியது.
சத்தத்தை கேட்டு ஜெயமணி வீட்டின் பின்புறம் மாட்டை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அதற்கு முன்பாக பலத்த காற்று வீசியதால் மின்கம்பி அறுந்து மாட்டின் மீது விழுந்து துடிதுடித்து மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதை அறியாமல் சென்ற ஜெயமணியும் தவறுதலாக மின் கம்பியின் மீது மிதித்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.
இது குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மின்சாரத்தை துண்டிக்குமாறு மின்சாரத்துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து மின்சாரம் துண்டிக்கப்பட்ட பின், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.