நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதை அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஏறக்குறைய 5 மாதங்கள் வரை நீட்டிப்பு, தளர்வு என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து வருகின்றது. இந்த ஊரடங்கு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அமலில் இருக்கும் நிலையில் மத்திய அரசு கொரோனவை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை, தடுப்பு, சுகாதார பணிகளை செய்து வருகின்றது, மாநில அரசுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருவதால் பிற நாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்பதற்கான பணிகளையும் மத்திய அரசு துரிதப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. வெளிநாட்டிலிருந்து வரும் ஒருவர் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். சொந்த செலவில் ஏழு நாட்கள் முகாமிலும், ஏழு நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள். பயண நேரத்திற்கு 96 மணி நேரத்திற்கு முன்பு பிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும். புதிய விதிகள் எட்டாம் தேதி முதல் அமலுக்கு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.