அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ 20 ஆயிரம் ஏக்கருக்கு பரவியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கின்ற ரிவர்சைட் கவுண்டி என்ற வனப்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை திடீரென காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. பின்னர் ஒரு சில மணி நேரத்தில் வெகுவாக பரவிய தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது. முதலில் 700 ஏக்கர் பரப்பளவில் தீ பரவியது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள், 1300 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களை கொண்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சி செய்தனர்.
ஆனால் தொடர்ந்து தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அந்தப் பகுதி முழுவதுமாக புகை மண்டலமாக மாறி விட்டது. அந்த காட்டுத்தீக்கு ஆப்பிள் ஃபயர் என அதிகாரிகள் பெயரிட்டனர். வனப்பகுதியை ஒட்டி 2500க்கும் மேற்பட்ட வீடுகள் அமைந்துள்ள நிலையில், அங்கு வசித்து வந்த 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினார்கள். இந்த நிலையில் ஏராளமான தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்திய போதிலும் கட்டில் அடங்காத காட்டுத்தீயால் 20,000 ஏக்கர் அளவிற்கு பரவியுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் செங்குத்தானமற்றும் கரடுமுரடான மலைப்பகுதிகளில் தீயணைப்பு வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் அணுக முடியாதவையாக இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.