கார்த்தி நடிப்பில் வெளிவந்த கைதி திரைப்படம் சர்வதேச படவிழாவில் வெளியிட இருப்பது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
கார்த்திக், நரேன், தீனா, அர்ஜுன் தாஸ், ஜார்ஜ் மரியான் ஆகியோர் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி வசூல் சாதனை படைத்த படம் “கைதி”. கதாநாயகி இல்லாமல் கதாநாயகனை மட்டுமே மையமாக வைத்து திரையுலகினரை திரும்பிப் பார்க்க வைத்த வெற்றி திரைப்படம். இப்படத்தினால் தயாரிப்பாளர், தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள் நல்ல லாபத்தை பெற்றனர். மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட்டு அங்கும் வரவேற்பை பெற்றுள்ளது.
அஜய்தேவ்கான் நடிக்க கைதி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ்க்கு கைதி படத்திற்கு பின்புதான் வாய்ப்பு கிடைத்தது. இச்சமயம் மேலும் பெருமை சேர்க்கும் வகையில் டொரன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட கைதி படம் தேர்வாகியுள்ளது. இந்த விழா வருகின்ற ஒன்பதாம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது. இச்செய்தியானது கைதி படக்குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.