ஆன்லைன் கல்வி விதிமுறை தொடர்பான தமிழக அரசின் அரசாணையை அனைத்து பள்ளிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31-ம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்கள் திறப்பதற்கு தாமதமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு எடுப்பது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகள் குறித்த தமிழக அரசின் அரசாணையை அனைத்து பள்ளிகளும் பின்பற்ற வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் தமிழக அரசின் விதிமுறைகளை பின்பற்றும் என எதிர்பார்ப்பதாகவும், ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்கு விசாரணையை 19ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும் தெரிவித்துள்ளது.