கொரோனாவிலிருந்து குணம் அடைந்த பின்பும் ஊர்மக்கள் ஒதுக்கியதால் கணவன் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஒருபுறம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் நாள்தோறும் குணமடைந்து வீடு திரும்பி வருகிறார்கள். குணமடைந்து வீடு திரும்பபவர்களும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களும், நோயால் பட்ட துன்பத்தை விட, சக மனிதர்கள் அவர்களை நடத்தும் விதம் தான் அதிகமாக துன்புறுத்தி வருகிறது.
அந்த வகையில், ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் வசிக்கும் வியாபாரி பெனிராஜ் மற்றும் அவர் மனைவி சிர்சா ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இருவரும் சிகிச்சைக்குப் பின் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். வீட்டிற்கு திரும்பியவர்களை ஊர்மக்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தி, கணவன்-மனைவி இருவரையும் ஒதுக்கி வைத்தனர்.
இதனால் மனமுடைந்த தம்பதி வீட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்திற்கு சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.