கேரளாவில் இளைஞர் ஒருவர் ஆறாவது மாடியில் இருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் கொல்லம் என்ற மாவட்டத்தை சேர்ந்தவர் சுமேஷ். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் முடித்த அவருக்கு கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை கிடைத்தது.ஜார்ஜியாவில் பணியாற்றி வந்த நிலையில் அவர் தனது நண்பர்களுடன் தனியாக அறை எடுத்து தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் சென்ற வெள்ளிக்கிழமை அன்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் வகையில் வீட்டில் பிரியாணி சமைத்து உள்ளனர். நண்பர்கள் அனைவருடனும் சேர்ந்து அரட்டை அடித்துக்கொண்டு சிரித்து விளையாடிக் கொண்டிருந்த அவருக்கு தொலைபேசியில் அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. அலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த போது, போனை தூக்கி எறிந்ததுடன் மட்டுமல்லாமல் சில நிமிடங்களிலேயே ஆறாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவத்தை சிறிதும் எதிர்பார்க்காத அவரின் நண்பர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். பின்னர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சுமேஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், சுமேசுக்கு தனிப்பட்ட முறையில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்ததாகவும், அதனால் அடிக்கடி மிகுந்த கவலையுடன் இருப்பார் எனவும் அவரது நண்பர்கள் கூறியுள்ளனர். அதே சமயத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக வருடாந்திர விடுமுறைக்கு கூட அவரால் தனது சொந்த ஊருக்கு செல்ல இயலவில்லை என்பதும் தெரிய வந்திருக்கிறது.