அமெரிக்காவில் அரசு ஒப்பந்த பணிகளில் வெளிநாட்டவர்களுக்கு தடை விதிக்கும் அரசாணையில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.
கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக பல்வேறு நாடுகளிலும் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து கொண்டே வருகிறது. மேலும் பொருளாதாரமும் பாதிப்படைந்துள்ளது.இதனைத் தொடர்ந்து அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை வழங்கக் கூடிய வகையில் அந்நாட்டின் அதிபர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதிபர் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு, வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு வந்து வேலை பார்ப்பதற்காக வழங்கப்படும் எச்1பி உள்ளிட்ட பல்வேறு விசாக்கள் வழங்குவதை இந்த வருடம் இறுதிவரையில் நிறுத்தி வைப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவில் அரசு ஒப்பந்த பணிகளில் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டவர்களை பணியில் அமர்த்துவதற்கு தடை விதிக்கும் அரசாணையில் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டிருக்கிறார். இந்த உத்தரவின்படி எச்1பி விசா உள்ள அனைவரையும் அரசு நிறுவனங்கள் ஒப்பந்த பணிகளில் அமர்த்துவதற்கு தடை விதித்துள்ளது. இத்தகைய நடவடிக்கையின் மூலமாக அமெரிக்கர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது உறுதி ஆகும் என்று அதிபர் டிரம்ப் கூறியிருக்கிறார். அதே சமயத்தில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளி நாட்டவர்களின் வேலைவாய்ப்புகள் மேலும் குறைவதற்கான நிலை ஏற்பட்டிருக்கிறது.