ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக தூங்கிக்கொண்டிருந்தவர் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டார்.
அந்தியூர் அருகே உள்ள கோவில்லூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ், கூலி தொழிலாளி தங்கராஜ்க்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும், கடந்த இரு தினங்களுக்கு முன்பு குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. வாய்த்தகராறு கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தில் பழி தீர்த்துக் கொள்ள நினைத்த முருகன், நேற்று முன்தினம் இரவு தூங்கிக் கொண்டிருந்த தங்கராஜ் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த தீயில் படுகாயமடைந்த தங்கராஜ் அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தகவலறிந்த வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இந்தநிலையில் தங்கராஜ் மீது தீ வைத்த முருகன், கோவில்லூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது நேற்று கைது செய்யப்பட்டார். முருகனை பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் 15 நாள் சிறை காவலில் அடைத்தனர்.