மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என சஞ்சய் ராவத் எம்பி மறைமுகமாக கூறியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நாளை நடக்க இருக்கிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். ஆனால் விழாவில் கலந்து கொள்ள முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கலந்துகொள்ள மாட்டார் என்பதை சஞ்சய் ராவத் எம்.பி. சூசகமாக கூறி இருக்கிறார். இது பற்றி அவர் கூறியதாவது:-
“அயோத்தி மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் கொரோனா பரவி வருவது முக்கிய பிரச்சினையாக உள்ளது. உத்தரபிரதேச மந்திரி கமல் ராணி கொரோனாவுக்கு உயிரிழந்து உள்ளார். மேலும் 3 மந்திரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நடைபெறும் விழாவுக்கு முடிந்த வரை குறைந்தளவு நபர்கள் தான் கலந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன். முக்கியமானது என்னவென்றால் பிரதமர் கலந்து கொள்கிறார். முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அங்கு எந்த நேரமும் செல்ல முடியும். கொரோனா பிரச்சினை காரணமாக முக்கிய தலைவர்களான எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோா் கூட கலந்து கொள்ளவில்லை.
ராமர் கோவில் கட்ட அடித்தளம் அமைத்தவர்கள் சிவசேனாவினர் தான். சிவசேனாவினர் தான் மசூதியை தகர்த்தனர் என்பதை பா.ஜனதா, விசுவ இந்து பரிஷத், சங் பரிவார் கூட ஒப்பு கொண்டு உள்ளனா். எனவே கோவில் கட்ட நாங்கள் தான் பாதை அமைத்து கொடுத்தோம். கோவில் கட்ட இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சி தான். உத்தவ் தாக்கரே கோவில் கட்ட சிவசேனா சார்பில் ரூ.1 கோடி அளித்து இருப்பதை நீங்கள் பார்த்து இருப்பீர்கள்” என அவர் கூறியுள்ளார்.
மேலும் பூமி பூஜைக்கு உத்தவ் தாக்கரேவுக்கு அழைப்பு விடுக்கவில்லையா? என அவரிடம் கேட்டபோது,” இங்கு யாரும் அழைப்பிதழுக்காக காத்திருக்கவில்லை”, என்றார்.