பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களிடையே குறைந்து வந்தது. அரசு ஒதுக்கீட்டில் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருந்தாலும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் காலியாக இருக்கின்றன.
தரமான கல்லூரிகள் இல்லாததும், படித்து முடித்ததும் வேலை வாய்ப்பு கிடைக்காத சூழலும் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கை குறைவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது. கடந்தாண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கு ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 80 ஆயிரம் பேர் கல்லூரிகளில் சேர்ந்தனர்.
இந்த ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்ப பதிவு நடைபெற்று வருகிறது. இன்று வரை ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 560 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டு எண்ணிக்கையை விட அதிகமாகும். மேலும் வரும் 16ஆம் தேதி வரை கால அவகாசம் இருப்பதால் விண்ணப்பிக்கும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 50 ஆயிரமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொருளியியல் படிப்பில் சேர மாணவர்களிடையே திடீரென ஆர்வம் அதிகரித்து இருப்பது அலுவலர்கள், பொறியியல் கல்லூரி நிர்வாகங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.