ஷேரிட் செயலிக்கு மாற்றாக இந்திய இளைஞர் கண்டுபிடித்த பைல் ஷேரிங் செயலுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
கடந்த மாதம் லடாக் எல்லையில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இந்திய ராணுவ வீரர்கள் சிலர் வீரமரணம் அடைந்தனர். சீன ராணுவ வீரர்களின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக, சீன நாட்டின் பொருள்களையும், செயலிகளையும் புறக்கணிப்போம் என பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து இந்தியாவில் 59 சீன செயலிகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதில், ஷேரிட் உள்ளிட்ட பல செயலிகள் அதிக இந்தியர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. அவற்றுக்கு சரியான மாற்று கிடைக்குமா என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.
அந்த வகையில், ஷேரிட்க்கு பதிலாக, File Share Tool என்ற புதிய செயலியை ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த திப்புசுல்தான் வாணி என்ற இளைஞர் கண்டுபிடித்துள்ளார். இதில் நிமிடத்திற்கு 40 MB வேகத்தில் பகிரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.