தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா தடுப்பு பணிகளை மாவட்ட வாரியாக நேரில் சென்று ஆய்வு நடத்தி வருகின்றார். இன்று பிற்பகல் 2 மணி அளவில் சென்னையில் இருந்து சேலத்திற்கு செல்லும் முதல்வர், இரவு சேலத்தில் தங்குகிறார். பின்னர் நாளை 6ஆம் தேதி சேலத்தில் இருந்து திண்டுக்கல் செல்லும் அவர், அங்கு மாவட்ட ஆட்சியர் உடன் கலந்தாலோசித்து தடுப்பு பணிகள் குறித்து கேட்டிருக்கிறார். காலை 10 மணி தொடங்கி 1.30 மணி வரை நடைபெறும் இந்த ஆலோசனையில் பல்வேறு திட்டங்களையும் தொடங்கி வைத்து தொழில் முனைவோர், விவசாய பிரதிநிதிகள், சுய உதவிக் குழுக்களை சந்தித்து பேசுகிறார்.
திண்டுக்கல்லில் இருந்து 2 மணி அளவில் மதுரைக்கு செல்லும் முதலமைச்சர் அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டங்களை நடத்துகிறார். பின்னர் தொழில் முனைவோர் பிரதிநிதிகள், வர்த்தக பிரதிநிதிகள், சுய உதவி குழுக்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு இரவு மதுரையில் தமிழக முதல்வர் தங்குகிறார். 7ஆம் தேதி காலை கார் மூலமாக நெல்லை செல்லும் தமிழக முதல்வர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு ஆய்வுக் கூட்டங்களை நடத்துகிறார்.
இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். பின்னர் நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதோடு விவசாயிகள், தொழில் பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். நெல்லையிலிருந்து சேலம் செல்லும் தமிழக முதல்வர் 8 ,9 ஆகிய தேதிகளில் சேலத்தில் இருந்து விட்டு, பின்னர் பத்தாம் தேதி காலை சேலத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு சென்னை செல்கிறார்.