பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க படும் டெல்டா பகுதிகளுக்கு விதிகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தஞ்சை மாவட்டம் பூதலூர் சேர்ந்த சிவக்குமார் என்பவர் மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் தமிழக அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தஞ்சாவூர் மாவட்டம் இடம்பெறுகிறது. தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளிலும் அரசு சார்பிலும், அரசு அனுமதியுடனும் மணல் குவாரிகள் இருக்கின்றன. நாள்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான லாரிகளில் மணல் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் அரசு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமான மணல் எடுக்கப்படுகிறது.
இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்றால் பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவித்திருக்கும் பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாயமே முற்றிலுமாக பாதிக்கப்படும் நிலை உருவாகும். ஆகவே தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து இருக்கும் டெல்டா பகுதிகளில் மணல் குவாரிகள் செயல்பட தடை விதித்தும், சட்டவிரோத மணல் கடத்தலுக்கு உதவிய அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு… பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலதற்கான விதிக்கள் குறித்து கேட்க அதற்கு அரசு தரப்பில்… தற்போது வரை விதிகள் எதுவும் வகுக்கப்படவில்லை என்றார். இதையடுத்து நீதிபதிகள் அங்கு இருக்கக்கூடிய மணல் குவாரிகளில் எடுக்கப்படும் மணல்கள் அரசு கட்டிடப் பணிகளுக்காக பயன்படுத்துகிறதா ? அல்லது தனியாருக்கு விற்கப்படுகிறதா ? அவ்வாறெனில் ஒரு யூனிட் மணல் எவ்வளவு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது ? என கேள்வி எழுப்பினர்.
அரசு தரப்பில் உரிய ஆவணங்களுடன் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.