இரண்டு எம்எல்ஏக்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமில்லாமல் கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி கொண்டிருக்கின்றனர். இதனால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் என பல்வேறு தரப்பினரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல்லில் தங்கியுள்ள திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாசுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. அவரின் பாதுகாவலருக்கு கொரோனா உறுதியாகி இருந்த நிலையில் தற்போது கருணாசுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை பூம்புகார் அதிமுக எம்எல்ஏ பவுன்ராஜ் என்பவருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.மயிலாடுதுறை எம்பி ராமலிங்கத்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது பவுன்ராஜ்க்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.