கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் சமூக இடைவெளியை பின்பற்றாத காட்சிகளைக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.
கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கலபுரகிக்கு நேற்று சென்றுள்ளார். கலபுரகி விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். அதே சமயத்தில் டி.கே.சிவகுமாருக்கு ஏராளமானோர் மாலை அணிவித்து வரவேற்றுள்ளனர். அந்நேரத்தில் டி.கே.சிவகுமாரும், காங்கிரஸ் தொண்டர்களும் சமூக இடைவெளியை பின்பற்றுவதற்கு மறந்துவிட்டனர். அதனால் அப்பகுதியில் சமூக இடைவெளி என்பது காற்றில் பறந்து சென்றது.
இதனைத்தொடர்ந்து அப்சல்புரா தாலுகாவில் இருக்கின்ற தேவலகங்காபுரா கிராமத்திற்கு டி.கே. சிவகுமார் சென்றுள்ளார். அப்போது அவரை வரவேற்பதற்காக ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் அப்பகுதியில் திரண்டுள்ளனர். அங்கேயும் சமூக இடைவெளியை எவரும் பின்பற்றவில்லை. இது குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கின்றன.
மேலும் டி.கே. சிவகுமாருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சித்தராமையா, ஐவான் டிசோசா ஆகியோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இருந்தாலும் டி.கே. சிவகுமார் தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளவில்லை. அதே சமயத்தில் சமூக இடைவெளியை பின்பற்றவும் அவர் மறந்துவிட்டார். ஒரு அரசியல் கட்சியின் தலைவரே கொரோனா விதிமுறைகளை மீறி இப்படி நடந்து கொள்ளலாமா? என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன.