Categories
தேசிய செய்திகள்

“மருத்துவ மாணவர்களுக்கு தேர்வு கட்டாயம்”- இந்திய மருத்துவ கவுன்சில்

மருத்துவ படிப்பு மாணவர்கள் தங்களின் தேர்வுகளை எழுதாமல் அடுத்த வருடத்திற்கு தேர்ச்சி வழங்க முடியாது என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பரவியிருக்கும் கொரோனா தொற்றால் பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள் தங்களின் மாணவர்களை தேர்வு எழுதாமல் தேர்ச்சி செய்து வருகின்றன. ஆனால் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகள் நடத்தப்படும் என்று யுஜிசி தெரிவித்துள்ளது. இந்தநிலையில் மருத்துவக் கல்லூரிகளை மீண்டும் திறப்பது பற்றியும் பல்கலைக்கழகத் தேர்வுகளை நடத்துவது பற்றியும் இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவுறுத்தலை வழங்கி வருகிறது. செய்முறை ஆய்வகம் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளை முடிப்பதில் கல்லூரி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும். கல்லூரிகளைத் திறந்து 2 மாதங்களுக்குள்ளாக அல்லது அரசு அனுமதி கிடைத்த பிறகு இதை மேற்கொள்ள வேண்டும்.

மேலும் பல்கலைக்கழக தேர்வுகளை மருத்துவ மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் 2020ம் ஆண்டு முதல் பாதியில் நடைபெற இருந்த மருத்துவ இறுதியாண்டுத் தேர்வின் மீதித் தேர்வுகளையும் விரைவில் முடிக்க வேண்டும். கல்லூரிகளைத் திறக்கும் வரை இறுதியாண்டு மாணவர்கள் தேர்வுகளுக்காக காத்திருக்க வேண்டியதில்லை. மேலும் மாணவர்கள் இறுதித் தேர்வு முடித்ததும் மருத்துவக் கல்லூரிகளிலோ, மருத்துவமனைகளிலோ பயிற்சிக்காக சேரலாம். மருத்துவ மாணவர்கள் தங்களின் பரீட்சைகளை எழுதாமல் அவர்களுக்கு அடுத்த ஆண்டுக்கு தேர்ச்சி வழங்க முடியாது என்று இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்து உள்ளது.

Categories

Tech |