தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவது பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட வடக்கு மாதவி சாலையைச் சேர்ந்த ஷகிலா பேகம் கடந்த 30ஆம் தேதி தனது உறவினர் வீட்டுக்குச் சென்ற நிலையில் மர்ம நபர்கள் அவரது வீட்டில் புகுந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர். இரவு வீடு திரும்பிய ஷகிலா பேகம் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் வைத்திருந்த 8 பவுன் தங்க நகை 50 ஆயிரம் ரூபாய்க்கு ரொக்கப்பணம் வெள்ளிப் பொருட்கள் உட்பட சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுரை முனிச்சாலை சீனிவாச பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த வீரவேல் என்பவர் காற்று வரவில்லை என்பதற்காக வீட்டின் கதவைத் திறந்து வைத்து விட்டு உறங்கி உள்ளார்.
நள்ளிரவில் 2 கொள்ளையர்கள் வீரவேல் வீட்டிற்குள் புகுந்து வீட்டிலிருந்த செல்போன்கள் மற்றும் 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை திருடிக்கொண்டு தப்பி ஓடி உள்ளனர். இந்த காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ள நிலையில் அதனை அடிப்படையாகக் கொண்டு கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள பலூர் கிராமத்தை சேர்ந்த கண்ணையன் என்பவர் தனது வீட்டில் வாசலில் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு சென்றுள்ளார். காலையில் எழுந்து பார்த்தபோது வாகனம் திருடு போனது தெரியவந்தது. மேலும் வீட்டின் உரிமையாளர் வடிவேல் என்பவரது இல்லத்தில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் ரொக்கம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. கொள்ளை சம்பவம் தொடர்பாக கொள்ளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.